இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக புகார் கூறியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் சில நாட்கள் தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, திடீரென ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார்.
நடிகை அஞ்சலியை தான் கொடுமை படுத்தவில்லை என்றும், தன்னை இழிவு படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார் என்றும் இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தும் நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகவில்லை.
கடந்த 12 ஆம் தேதி அஞ்சலிக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அந்த நோட்டீசில் இன்று (29 ஆம் தேதி) ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அஞ்சலி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் களஞ்சியம் ஆஜராகி இருந்த நிலையில், நடிகை அஞ்சலிக்கு பதில் அவரது வழக்கறிஞர் மேகநாதன் ஆஜராகி, அஞ்சலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நேரில் ஆஜராகவில்லை என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணயை அடுத்த மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, நடிகை அஞ்சலிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.