Wednesday, October 30, 2013

‘ஆரம்பம்’ டைட்டில் என்னுடையது : வெறும் 2800 ரூபாயில் சொந்தம் கொண்டாடும் ஆசாமி?

பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து பல கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். படம் நன்றாக வர வேண்டும் என்று பல நூறு டெக்னீஷியன்களும் இரவு பகல் பாராமல் அந்தப்படத்தில் உழைக்கிறார்கள்.

ஆனால் இந்த உழைப்பின் பின்னணியே தெரியாமல் சில புதுமுக டைரக்டர்கள் அந்தப்படம் ரிலீசாகும் நேரத்தில் ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் ஏதாவது பணத்தை கறப்பதற்காகவே கிளம்பி விடுகிறார்கள்.

அப்படித்தான் அஜித்தின் ‘ஆரம்பம்’ பட டைட்டில் என்னுடையது என்று புதிதாக ஒரு டைரக்டர் கிளம்பியிருக்கிறார்.

‘ஆரம்பம்’ படம் ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாத அந்த ஆசாமி இப்போது நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில் அந்த டைட்டில் என்னுடைய டைட்டில் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கே.கண்ணன் என்பவர் சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

‘‘இனிதான் ஆரம்பம்’’ என்ற பெயரில் நான் ஒரு படம் தயாரித்து டைரக்ட் செய்து வருகிறேன். இந்த தலைப்பை கில்டில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் என்ற நிறுவனம் ‘ஆரம்பம்’ என்ற பெயரில் அஜித் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

‘ஆரம்பம்’ பெயரில் படம் ரிலீசானால் ‘இனிதான் ஆரம்பம்’ என்ற பெயரில் நான் எடுத்து வரும் படத்துக்கு பாதிப்பு ஏற்படும். மக்களுக்கும் குழப்பம் வரும். அதனால் ‘ஆரம்பம்’ என்ற டைட்டிலுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வருகிறது.

முன்பு இதேபோல விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தை ஆரம்பித்தபோது அமைதியான இருந்த ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர் அந்தப்படம் ரிலீசாவது தெரிந்தவுடன் டைட்டிலை மாற்றச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தோற்றுப் போனார்கள்.

இப்போது அதேமாதிரி ஒரு நிலைமை தான் இந்த ஆசாமிக்கும் ஏற்படும் என்று தெரிகிறது.

ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் புதிய படங்களின் டைட்டிலை கில்டு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். இதில் கில்டில் பதிவும் செய்ய வெறும் 2800 ரூபாய் தான், ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய 1 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும்.

அதனால் சில லட்சங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு படம் எடுக்கிறேன் என்று வரும் சில புதிய தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் 2800 ரூபாயை மட்டும் கில்டில் கட்டிவிட்டு இதுபோன்ற பெரிய படங்களின் டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது.

ஆனால் கில்டை விட தயாரிப்பாளர் சங்கம் தான் இந்த விஷயத்தில் அதிக அதிகாரங்களை கொண்டது. தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற பிளாக் மெயில் சமாச்சாரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்?